விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி ராஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்றைய தினம் (05.12.2024) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.
மிரிஹான காவல்துறை
குறித்த காரை லொஹான் ரத்வத்த, பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி, மிரிஹான காவல்துறையினரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவ்வாறானதொரு பின்னணியில், ரத்வத்தவின் மனைவியான ராஷி பிரபா ரத்வத்தேயும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் (Nugegoda Magistrate’s Court) இன்று பிணை வழங்கியுள்ளது.