ஜந்து மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு காலக்கெடு!

இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள டபிள்யூ.எம். மெண்டிஸ் கம்பனி, ரோயல் டிஸ்டில்லரிஸ் உள்ளிட்ட 05 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவையை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் அவர்களின் உரிமங்களை இடைநிறுத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

அதன்பிறகு, இந்த மனுவை எதிர்வரும் ஜனவரி 22-ம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் அமர்வு, அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பிரதிவாதிகள் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.

இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளான மதுபான நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை தொடர்ச்சியாக செலுத்தாதது தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.