மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி விவசாயிகள் அவலம்!

மலையக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியினால் மலையகம் மற்றும் மத்திய பிரதேச விவசாயிகள் மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ள போதிலும், விலை குறைப்பின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kavirathna) தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை, கேப்பிட்டிபொல, நுவரெலியா, எம்பிலிபிட்டிய ஆகிய விசேட பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் ரோஹினி கவிரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை என்றும், அறுவடை செய்து, பொருளாதார மையங்களுக்குக் கொண்டு சென்று முன்பணம் கொடுத்தும், வருமானம் கிடைக்காத சூழ்நிலையில் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் நடவடிக்கை
எவ்வாறாயினும், இலஙகை முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் அரை நகர்ப்புறங்களில் காய்கறி விலைகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், விவசாயி பெறும் விலைக்கும் நுகர்வோர் பெறும் விலைக்கும் இடையிலான இடைவெளி மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென ரோஹினி கவிரத்ன விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.