நாளையுடன் நிறைவடையவுள்ள பிரச்சார நடவடிக்கைகள்!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, நாளையுடன் நிறைவடையும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகளையும் விபரங்களையும் 24 ஆம் திகதியன்று ஒவ்வோர் தொலைக்காட்சி,

வானொலி அலைவரிசையின் ஒரு பிரதான செய்தியறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்வதற்கு செயலாற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகும் செய்தித்தாள்களில் புகைப்படங்களையும் கூட்டங்கள் பற்றிய குறிப்புகளையும் வெளியிடுவதற்கு செயலாற்றுமாறும் அந்த ஆணைக்குழு கோரியுள்ளது.

இதேவேளை, ஒவ்வோர் அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் ஏற்புடையது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் பற்றிய விபரங்களை பிரசித்தப்படுத்தும் போது வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒத்த சந்தர்ப்பம் கிடைக்கின்ற விதத்தில் செய்தித்தாள்களில் இடமொதுக்கிக்கொடுப்பதுடன்,

அலைவரிசைகளிலும் ஒலிபரப்பு காலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 24, 25, 26 ஆம் திகதிகளில் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அந்நாளுக்குரிய செய்தித்தாள் தலைப்புகளை முன்வைக்கும் போது நாளிதழ்களின் செய்தித் தலைப்பை மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுடன்,

செய்திகள் சார்ந்த வேறெந்தக் கருத்து, யோசனை அல்லது செய்திக்கு மாற்றமான கருத்து வெளிப்பாடொன்றை அதனை சமர்ப்பிக்கும் ஊடகவியலாளர்கள் முன்வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எந்தவோர் அரசியல் பிரச்சார செய்தியொன்றின் மூலம் கட்சியையோ அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கும் விதத்திலான சமர்ப்பிப்புகளை முன்வைக்காமல் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும் காலப்பகுதியினுள் எல்பிட்டிய உள்ளூர் அதிகார சபை அதிகார இடப்பரப்பினுள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்கள் குழுக்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை வலுவாக்கம் செய்வதற்கு உதவுமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் தேர்தல் ஆணைக்குழு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.