அரச ஊழியர்களின் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல்.   ரத்நாயக்க,

“தற்போது, ​​தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 759,210 தபால் வாக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுத் தேர்தலில் 25,731 தபால் மூல வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இம்மாதம் 23ஆம் திகதி தபால் மூல வாக்குஅட்டைகள் வழங்கப்படும். அதேபோல், உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் இம்மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது. அத்துடன்,  போட்டியில் கலந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கான ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகள் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நாளை  செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து  அறிவிக்கப்பட்டுள்ளது.