தாமரைக் கோபுர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கொழும்பு – தாமரை கோபுரத்திலிருந்து 16 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மனநல நிபுணர்கள் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆலோசகர் மனநல வைத்தியர் சமன் வீரவர்தன,

இளம் தலைமுறையினர் பலர் மன அழுத்திலிருக்கும் போது அது குறித்த அறிகுறியைக் காட்டாமல் தனிமையில் போராடுவதாகவும் அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

“நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகிச் செல்வது, திடீர் மனநிலை மாறாட்டங்கள் போன்ற அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் அறிந்துகொள்வது முக்கியமானது” என்று வைத்தியர் வீரவர்தன சுட்டிக்காட்டினார்.

2 வாரங்களுக்கு மேல் நீடித்திருக்கும் சோகம் அல்லது எரிச்சல், பொழுதுபோக்குகள் அல்லது பிறருடன் பழகுவதில் ஆர்வமின்மை மற்றும் தூக்க முறைகளில் மாற்றம், பசியின்மை அல்லது கல்வி செயல்திறன் ஆகியவற்றில் திடீர் மாற்றங்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்துமாறு தெரிவித்தார்.

நம்பிக்கையற்ற உணர்வு அல்லது வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்புவது அல்லது அதிலிருந்து ஒழிந்து கொள்ளல் போன்ற பேச்சுக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“பிள்ளைகளுடன் திறந்த தொடர்பைப் பேணுவதும் இன்றியமையாதது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் பற்றி பேசுவதற்கு பாதுகாப்பாக உணரும் சூழலை உருவாக்க வேண்டும்,” என்று நிபுணர் விளக்கினார்.

“பதின் பருவ வயது மிகவும் கடினமானது. பல வாலிபப் பருவத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், பெற்றோர்கள் சீக்கிரம் அடியெடுத்து வைக்கவில்லை என்றால், அவர்களுடைய பிள்ளைகள் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.”

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டால், வைத்திய நிபுணரிடம் அல்லது ‘1926’ என்ற அவசர அழைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்களை வலியுறுத்தினார்.

“பிள்ளைகள் தேவையான ஆதரவை சரியான நேரத்தில் பெற்றால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும், என வைத்தியர் வீரவர்தன மேலும் கூறினார்.