பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 5,99,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி எனவும் தெரியவருகிறது.
சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் இதன்போது அதிரடிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மன்னார் பகுதியில் வசித்து வரும் சுஜி என்ற நபர் படகொன்றில் வந்து சிலாவத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து வழங்கியதாக தெரிவித்தார்.
பின்னர், அவரது அறிவுறுத்தலின் பேரில் போதை மாத்திரைகள் கொழும்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.