ஜனாதிபதியின் மனிப்புக்காக காத்திருக்கும் ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான சில ஆவணங்களைப் பெறுவதற்கு ரஞ்சன் ராமநாயக்க 02ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றார்.

ராமநாயக்க, ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடமிருந்து முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை எதிர்பார்க்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடவோ , அரசியல் பேசவோ முடியாது என சில கட்டுப்பாடுகளை விதித்து விடுதலை செய்திருந்தார்.

இந்நிலையில் நாட்டின் புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனக்கு பூரண மன்னிப்பு வழங்குவார் என ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர் விஜித ஹேரத் கூறுகையில்,

​​ ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு திருட்டு மற்றும் மோசடி காரணமாக அல்ல என்றும் அவர் உண்மையைப் பேசியதால் என்றும் கூறினார்.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சில அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகவும் , அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.