நுவரெலியா முன்னாள் மாநகர சபை முதல்வரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டினுள் இனந்தெரியாதோர் புகுந்துள்ளனர்.
வீட்டின் மேல் மாடியில் உள்ள ஜன்னலை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் தனி அறையொன்றில் உள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்க நகைகள் மற்றும் சில பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.
எனினும், அலுமாரிகள் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது ஜன்னல் திறக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்து திருடர்கள் இருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்துள்ளனர்.
அயலவர்கள் பிடிக்க முயன்றபோதும் திருடர்கள் முச்சக்கரவண்டி மூலம் தப்பிச் செல்லும் காட்சிகள் வீட்டுக்கு அருகில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.