பங்களாதேஷ் அரசியலில் ஏற்ப்பட்டுள்ள பாரிய மாற்றம்!

பங்களாதேஷில் ஆர்ப்பாட்டங்களால் ஆட்சியை கவிழ்த்த மாணவர்கள் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

இதன்படி அவர்கள் நாட்டில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பங்களாதேஷ், பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், தொடர்ந்தும் அவாமி லீக், பிஎன்பி எனும் தேசியவாத கட்சிகளே தான் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இடையில் இராணுவத்தினரும் நாட்டை ஆட்சி செய்தனர்.

இடஒதுக்கீடு வழங்கும் விடயம்
இந்தநிலையில் கடந்த 2009 முதல் சேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அவாமி லீக் கட்சியே தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வந்தது.

எனினும் அந்த 15 ஆண்டு தொடர் ஆட்சிக்கு கடந்த 5ம் திகதி மாணவர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷை தனி நாடாக்க போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விடயத்தில் எதிர்ப்பை வெளியிட்ட போராட்டமே ஆட்சிக் கவிழ்ப்புக்கும் வழிகோலியது

இறுதியில் ஆட்சியை கைவிட்டு சேக் ஹசீனாவும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம்
இதனையடுத்து அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார்.

சேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமாக போராட்டத்தை முன்னெடுத்த 26 வயது நிரம்பிய டாக்கா பல்கலைக்கழக மாணவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசீப் மஹ்மூத் ஆகியோர் இந்த இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், ஆலோசகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையிலேயே மாணவர்களின் அரசியல் கட்சி என்ற புதிய திட்டம் வெளியாகியுள்ளது.

இந்த அரசியல் கட்சி என்பது மதசார்பின்மை, பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டாக இருக்கும் என்று மாணவ பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் புதிய முயற்சிக்கான கால நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை.