வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு வீதிக்கிறங்கிய மக்கள்!

வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (15) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

சமூக விரோத செயற்பாடுகள்
இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மதுபானசாலை ஆயித்தியமலை பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் இது திறக்கப்பட்டால் சமூக கலாசார சீர்கேடுகள், சமூக விரோத செயற்பாடுகள் அப்பகுதியில் இடம்பெறும் எனவும், பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபானசாலையா”, “அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே”, “வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

மேலும் ஆர்ப்பாட்ட முடிவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி போன்றோருக்கான பிரதியிடப்பட்ட மகஜர் ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.