இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது.
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிகளவான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
1982ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 06 வேட்பாளர்களும் 1988ஆம் ஆண்டு 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு 06 பேரும், 1999 ஆம் ஆண்டு 13 பேரும், 2005 ஆம் ஆண்டு 13 பேரும், 2010 ஆம் ஆண்டு 22 பேரும், 2015 ஆம் ஆண்டு19 பேரும் போட்டியிட்டனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு
ஒரு வேட்பாளர் அதிகரித்தால் செலவு மேலும் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் 75,000 ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
1981 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை ஒன்பது மணிக்கு வேட்புமனு தாக்குதல் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்டுப்பணம் செலுத்திய சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.