வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரத்தின் வழிபாடு

நாளை (16) வரலட்சுமி விரதம் ஆரம்பமாகவுள்ள அந்த நாளில் எவ்வாறு விரதம் இருந்தால் என்னென்ன பலன் பெறலாம் என நாம் இங்கு பார்போம்.

ஆடி மாதத்தின் நிறைவு நாள் மற்றும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையுடன் இணைந்து வருவதால் இது இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இந்த நாளில் மகாலட்சுமியை எளிய முறையில் வழிபட்டாலும், அடுத்த ஓராண்டிற்கு நம்முடைய வாழ்க்கை வளமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதத்தை பெண் மட்டுமின்றி ஆண்களும் கடைபிடிக்கலாம். மகாலட்சுமியின் அருளையும், செல்வத்தையும் பெறக் கூடிய நாள் என்பதால் இந்த நாளில் யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.

மகாலட்சுமியின் மனம் மகிழும் படி விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து விதமான நலன்களும் வரலட்சுமி விரதத்தன்று கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் இருக்கும் முறை
வரலட்சுமி விரதம் என்றாலே அது பெண்களுக்குரிய விரதம் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.வழக்கமாக சுமங்கலி பெண்கள் தான் தங்களின் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்பதற்காக, குடும்ப நலனுக்காகவும் வேண்டிக் கொண்டு விரதம் இருந்து வழிபடுவார்கள்.

மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து நம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பூஜைகள் செய்து, வழிபட்டு, பலவிதமான வரங்களை பெறுவதற்குரிய நாளாகும்.

திருமணம் ஆகாத பெண்களும் இந்த நாளில் வரலட்சுமி விரதம் இருந்து, கையில் நோன்பு கயிறு கட்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள். இதனால் விரைவில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும், கண்டிப்பாக யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வரலட்சுமி விரதத்தை கண்டிப்பாக இருக்க வேண்டியவர்கள்
ஜாதகத்தில் யாருக்கெல்லாம் சுக்கிரன் கெட்டு போய் உள்ளதோ அவர்கள் சுக்கிரனுக்குரிய தெய்வமான மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் அன்று வழிபடலாம்.

ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு, கேது, மாந்தி சேர்ந்து இருந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த விரதம் இருக்க வேண்டும்.

பெரும் பண இழப்பு போன்ற சுக்கிரன் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த விரதம் இருக்கலாம்.

கணவன்-மனைவி பிரச்சனை, விவாகரத்து, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்பவர்கள் வரலட்சுமி விரதம் இருக்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான கிரகம் சுக்கிரன் என்பதால் தீராத நோய், நீண்ட காலமாக நோயால் துன்பப்படுபவர்கள் இந்த விரதம் இருக்கலாம்.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவமனைக்கு செல்லும் நிலை, மருத்துவ செலவுகளை அதிகம் சந்திப்பவர்கள் இந்த விரதம் இருக்கலாம்.