சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) இதனை தெரிவித்தார்.

அதன்படி, தற்போது காணப்படும் 8.5 % வட்டி வீதம் 10 % ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்பு

பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின் போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே ஆகும்.
இதனால் நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான 8.5% வட்டி வீதத்தை இருந்து 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.