கனடாவில் குழந்தைகளின் உணவில் மோசமான கிருமிகள்!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்தில் துவங்கிய ஒரு மாபெரும் கிருமித் தொற்று 448 பேரை பாதித்தது.

கனடாவின் கால்கரி நகரில், ஈ கோலை என்னும் நோய்க்கிருமியின் தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டார்கள்.

அவர்களில் 38 பிள்ளைகள் மற்றும் ஒரு பெரியவரின் நிலைமை மோசமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

23 பேர் பயங்கர சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டார்கள். சிறுநீரகத்திலுள்ள இரத்தக்குழாய்களில் கசிவு ஏற்பட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் நிலை வர, அவர்களில் 8 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கவேண்டியதாயிற்று.

அதிர்ஷ்டவசமாக, யாரும் பலியாகவில்லை!

இந்த தொற்று, கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்திலிருந்து துவங்கியது.

ஆனால், குழந்தைகளின் உணவில் மோசமான கிருமிகள் கலந்தது எப்படி என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

அதாவது, எங்கிருந்து இந்த நோய்க்கிருமி பரவியது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆயிரக்கணக்கானோருக்கு உணவு விநியோகிக்கும் ஒரு மைய சமையலறையிலிருந்து அந்த பாதிப்பு துவங்கியது தெரியவந்தது.

மாட்டிறைச்சி உணவு ஒன்றிலிருந்துதான் அந்தக் கிருமி பரவியிருக்கலாம் என்ற கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.

ஆனால், அந்த இறைச்சியில் எங்கிருந்து அந்த மோசமான கிருமி வந்தது? இறைச்சியிலேயே கிருமி இருந்ததா அல்லது இறைச்சியில் கலக்கப்பட்ட பிற உணவுப்பொருட்களிலிருந்து அது வந்ததா, அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பணியாளரின் சரியாக கழுவப்படாத கையிலிருந்து அது உணவுக்குப் பரவியதா என்பது தெரியவில்லை.

கிருமித் தொற்று பரவலுக்குப் பின், சம்பந்தப்பட்ட சமையலறை மூடப்பட்டது. பிறகு புதிய ஒப்பந்ததாரர் ஒருவர் பொறுப்பேற்க, மீண்டும் அந்த சமையலறை திறக்கப்பட்டுள்ளது.