ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற!

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனை தரிசித்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் என்றும் சுமங்கலி பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருவது வழக்கம். சிறப்புமிக்க இந்த ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

ஆடி மாதத்தில் வருகின்ற நான்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பான பலன் தரும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு அல்லது பழம், பால் மட்டும் சாப்பிடுவதாலும் விரதம் இருந்த பலனை பெறலாம்.
ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அத்துடன் கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும்.

நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தகுந்த வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். நல்ல லாபம் கிடைக்கும்.

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை குறிப்பாக திருமணமான பெண்கள் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும்.

இது கடவுள்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும்.