கைலாசா என்ற ‘நாட்டை’ உருவாக்கியுள்ள 4 ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார்.
இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது.
தற்போதும் கைலாசா எங்குள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. சில கூடுதல் தகவல்களை மட்டும் நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாலியல் தொந்தரவு வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் சிலவற்றில் விசாரிக்கப்பட்டு வந்தவர் நித்யானந்தா.
கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது இரு மகள்களை நித்யானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்று வழக்கு தொடுத்திருந்தனர்.
2010ம் ஆண்டு பெங்களூரூவில் தொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா, 2019ம் ஆண்டு முதல் அந்த வழக்கு தொடர்பான எந்த விசாரணைக்கும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவர், 2020ஆம் ஆண்டில் திடீரென தாம் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு இந்து சமயத்தை தழுவிய தேசத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறி அதற்கென ஒரு கொடி, நாணயம், ஆட்சி முறை போன்றவற்றை வெளியிட்டிருந்தார்
2019ம் ஆண்டு அவரால் தேசம் என அழைத்துக் கொள்ளப்படும் கைலாசாவுக்கு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்திய நித்யானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அங்கிருந்து கைலாசாவுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் ஆன்மிக அனுபவத்தை கொடுத்து பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டு விடுவோம் என்று கூறினார்.
தமது தேசத்தில் வந்து போகும்வரை அனைத்து செலவையும் தமது நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறி ஒரு காணொளியை நித்யானந்தா வெளியிட்டார்.
அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், இப்போதும் தனது யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.
கைலாசவாசியாக இருக்க, இந்து வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் எவரும் தகுதியானவர் என்றும், இந்துவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர், இயற்கை பேரிடர், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இடம் பெயர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மூலம் அகதியாக பதிவு செய்து கைலாசாவுக்கு வரலாம் என்றும் நித்தியானந்தா சார்பில் கூறப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைலாசா “ஒரு பக்கம் கடலும், மறு புறம் பனிமலையும் சூழ” அமைந்திருக்கும் நாடு என்று விவரித்திருந்தார்.
“கைலாசாவில் எனக்கு என்று தனி அறை கிடையாது. பிரதான அரங்கில் எனது ஊஞ்சல் இருக்கும். நான் அங்கேயே தான் இருப்பேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என்றும் பேசியிருந்தார்.
தற்போது, நித்தியானந்தாவின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் ஒன்றின் மூலம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை கொண்ட மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் ‘கைலாசா’ இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாசத்தில் ஏழு அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.