கொரோனா தொற்று நிலைமை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தபோதிலும், அரச ஊழியர்களிலோ, அல்லது அவர்களது சம்பளத்திலோ எவ்வித வெட்டுக்களும் இன்றி அரச சேவையை ஸ்திரமாகப் பேணியது வெற்றியாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் இந்த விடயத்தில் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘இரண்டு வருட முன்னேற்றம்’ என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் பேசிய உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,
மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டம்
கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டமாக இருந்தது. நாங்கள் எதிர்கொண்ட கொரோனா தொற்றுநோய் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும் சிலர் பணி நீக்கம் இருக்கும் என்று கருதினர். இதனால் பொதுப்பணித்துறை குழம்பிப் போய்விடும் என்று கருதப்பட்டது.
சிறந்த முகாமைத்துவம்
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன ஆற்றிய சிறந்த முகாமைத்துவத்தினால் அரச சேவையை பாதுகாக்க முடிந்துள்ளது.
இது உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு அரச சேவை மற்றும் இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் பூரண ஆதரவை வழங்கியதை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.
இப்போதெல்லாம் பல இடங்களில் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியதில் எமது அமைச்சுக்கு பெரும் பங்குண்டு என்றே கூற வேண்டும் என்றார்.