தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது.
யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிறப்பு முதல் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவத்தை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானது என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமலகே தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள்
இதன்போது, குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை அடையாளம்கண்டு கொள்ள முடியும். அவ்வாறான குழந்தைகளை சமூக குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், வைத்தியர்கள், சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல நிபுணர்களிடமும் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது ஐந்து மாவட்டங்களில் உள்ளதாகவும் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.