இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சந்தேக நபர்கள் இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் பணத்தையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இணையவழி பணப்பரிவர்த்தனை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக 154,200/- இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.