நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Ministry of Irrigation and Water Resources Management) தெரிவித்துள்ளது.
இதேவேளை களுகங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.