நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் மழை காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் கணிசமாக அளவு உயர்ந்துள்ளன.
சில நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.
நோர்ட்டன் பிரிஜ் பகுதியில் நேற்று இரவு 24 ம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர், வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நில பகுதியிலும் களனி கங்கைக்கு அருகாமையில் இருப்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மழையுடன் அடிக்கடி பனி மூட்டம் காணப்படுவதனால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா விதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் மண் திட்டுக்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால் இந்த வீதிகளில் பயணிப்பவரர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதே வேளை அடிக்கடி கடும் காற்று வீசுவதனால் மரங்களுக்கு சமீபமாக இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.