நேற்றையதினம் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்துமாணவி கருத்து தெரிவிக்கையில்,
எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன்.
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும்
கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன். நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.
எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு அதனை நிறைவேற்றியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
அதோடு அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும். தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு.
என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மாணவி வஜினா பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதேவேளை மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.