தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்து விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்காலக் கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 சதவீதம் அதிகமாகும் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்தார்.
அதிகரிக்கும் விபத்து
இதன்போது வீதி விபத்துக்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 வீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த காலப்பகுதியில் நிகழும் விபத்துக்களில் தலை மற்றும் முகத்திற்கு ஏற்படும் பாதிப்பில் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது.
மற்ற காலங்களுடன் ஒப்பிடும் போது இக்காலத்தில் மது பாவனை 4 – 7 சதவீதம் வரை அதிகரித்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
மற்ற பருவங்களுடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மற்ற பருவங்களை ஒப்பிடும்போது பெண்களின் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாகவும் அவதானிக்க முடிகின்றது.
இறப்பு எண்ணிக்கை
ஏனைய பருவங்களில் சுமார் 20 சதவீதமாக ஆக இருக்கும் பெண் மரணங்கள் வருடத்தில் 33 சதவீதமாக அதிகரிப்பதாகவும் அவர்களில் 50-60 வயதுக்குட்பட்டவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இக்காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் சிறு பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் கவனம் குறைந்து அவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.