கல்முனை(Kalmunai) வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தொடர் போராட்டமானது 9ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்காக செயலாற்றுவதற்காக மாத்திரமே.
இருந்த போதிலும் அவர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் பிரயோகித்து வருவது சட்டவிரோதமானதும், சட்டமுறை அற்றதுமான செயற்பாடாகும்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனுமதி
இந்த சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்றது.
இந்நிலையில், கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட செயலகத்தினாலும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினாலும் மேற்கொள்ளப்படவில்லை என்று சட்டமுறை அற்ற செயற்பாடுகளை முன்வைத்து இன்றும் 9வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பாண்டிருப்பு பிரதேச மக்கள் நடைபவனியாக போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய நாடாளுமன்ற அமைப்பின் போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த மக்களின் போராட்டம் தொடர்பாகவும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.