இலங்கை தலைநகர் கொழும்பில் ஏழுமலையான் கோயிலில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, இலங்கையில் ஏழுமலையான் கோயில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து இந்திய அரசாங்கம் சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து கோவில் கட்டுவதற்கான இடங்கள் மற்றும் எவ்வளவு மதிப்பீட்டில் கோவில் கட்டுவது தொடர்பில் ஆய்வு செய்யவிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், சில நிர்வாக காரணங்களுக்காக தர்மா ரெட்டியின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி, இலங்கை விஜயம் செய்து கோவில் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்யவுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.