இலங்கையை ஆக்கிரமிக்க முயற்ச்சிக்கும் இந்தியா!

ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும் எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் சமகால அரசியல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகள் இலங்கையைக் குறி வைக்கின்றன.

ஈழத்தமிழர்கள் 

ஆகையால் அதற்கு இந்தியா பலிக்கடாவாக ஆகக்கூடாது அத்தோடு இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியாவிற்கு ஒரே ஒரு வழியே உள்ளது.

அது ஈழத்தமிழர்களை விட வேறு வழியில்லை என்பதோடு கடந்த காலங்களில் இலங்கையை முழுமையாகக் கைப்பற்றி தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டது.

தென்னிலங்கையிலே பல நகர்வுகளை மேற்கொண்டது ஆனால் அனைத்து நகர்வுகளும் முறியடிக்கப்பட்டு இன்று அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கமே தென்னிலங்கையில் இருந்து வருகின்றது.

அந்த நாடுகள் தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தங்கள் நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கே ஆபத்து

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பகுதியில் பலம் வாய்ந்த சக்தியாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் சுயநிர்ணய உரிமையும் மற்றும் அரசியல் இருப்பும் இங்கு தக்க வைக்கப்படுமாக இருந்தால் அது இந்தியாவிற்கே பாதுகாப்பானதாக அமையும்.

இதனை இந்தியா என்றுமே உணர்ந்ததில்லை அத்தோடு இன்றும் அவ்வாறான ஒரு நிலையைத்தான் இந்தியா கடைப்பிடித்து வருகின்றது.

இந்தியா தொடர்ச்சியாக இதே நிலைமையைக் கையாளுமாக இருந்தால் இலங்கையில் இந்தியாவிற்கான அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு பாரியளவிலான பின்னடைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.