ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் போலீஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.
இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.