வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர்.
இதன் போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்களை கடற்படை வெளியே விரட்டி கொலைக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளது.
கடற்படையினர், அவர்களை விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெறும்போது அவ்விடத்தில் இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் கடற்படையினர் நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் குறித்த கடற்படையினர் நால்வரிடமும், யாழ்ப்பண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட கொலை சந்தேகநபர்கள் நால்வரும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.