நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (29) இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு-ஹட்டன் நெடுஞ்சாலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீர்கொழும்பில் இருந்த பயணித்த குழந்தையின் தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து தவறி விழுந்துள்ளது.
பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்
இதனை அறியாமல் குழந்தையின் தாயாரும் மற்றவர்களும் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர், இதன்போது முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்த நிலையில், குழந்தையை கித்துல்கல காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், குழந்தை காணாமல் போனதை அறிந்த குடும்பத்தினர் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்ற பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தைக்கு அதிஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர், இந்நிலையில், தாயுடன் குழந்தை மேலதிக கண்காணிப்பிற்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.