மும்பை : இந்திய அணியில் ஓராண்டாக தொடர்ந்து இடம் பெற்று வந்த இஷான் கிஷன் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு கிடைத்தது போன்ற வாய்ப்பு சுப்மன் கில்லை தவிர வேறு எந்த வீரருக்கும் சமீபத்தில் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்தார் இஷான் கிஷன். இதே போல மூன்று அணிகளிலும் இடம் பெற்ற ஒரு வீரர் சுப்மன் கில். அவர் கூட இடையே டி20 அணியில் சேர்க்கப்படவில்லை.
இஷான் கிஷனுக்கு மூன்று வித அணிகளிலும் வாய்ப்பு கிடைத்தாலும் அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு என்பது குறைவாகவே கிடைத்தது. அவர் “வாட்டர் பாய்” என்ற அளவிலேயே அணியில் நீடித்தார். சுமார் ஓராண்டாக ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களையும் கடந்து அதே நிலை நீடித்ததை அவர் விரும்பவில்லை. இதை அடுத்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் தான் மனச் சோர்வின் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக கூறிச் சென்றார். எப்படியும் அடுத்து நடக்க இருந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அவர் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகத்தால் கூறப்பட்டது.
ஆனால், இன்று வரை இஷான் கிஷன் தன் மாநில அணியை நிர்வகித்து வரும் ஜார்கண்ட் கிரிக்கெட் அமைப்பை தொடர்பு கொள்ளவில்லை. அவர் மீதமுள்ள ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடுவாரா? என்பது கூட தெரியவில்லை என்றே ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அமைப்பினர் கூறி உள்ளனர். இதனிடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதில் இஷான் கிஷன் பங்கேற்றாலும், அதனை அடுத்து அடுத்து நடைபெற உள்ள 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவரை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என திட்டவட்ட முடிவில் இருக்கிறது பிசிசிஐ.
அவர் தாமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பாதியில் விலகியதும் இல்லாமல், தாங்கள் கூறியும் உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருப்பதை தேர்வுக் குழுவும் ரசிக்கவில்லை. இஷான் கிஷனின் இந்திய அணி எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது