ஒரு வருட காலப்பகுதியில் மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய 08 இலட்சம் பேரின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குழுக்கூட்டத்திலேயே மேற்குறித்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புக்களில் பெரும்பாலானவை ஏழை மக்களது இணைப்புக்கள் என்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் பாதிப்பு
துறைசார் கண்காணிப்புக்குழு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த மின்துண்டிப்பினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நிலைமையினால் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பு உருவாகுவதற்கு ஏதுவான சூழலாக இது காணப்படும்.
முன்மொழிவுகள்
எனினும், நிர்ணய செலவுக்கு ஏற்ற விலையாக மின் கட்டணத்தை மாற்ற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபைக்கு சில முன்மொழிவுகளை குறித்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, இவ் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 03 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை வகுக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க மின்சார சபைக்கு உத்தரவிடுவது. வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறப்பு நியாய அலகு முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தொழில் முறையைப் பாதுகாக்கும் விலைக் கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்களை பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.