மக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடியில் சிக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற எமது தீர்மானங்கள் சரியானவையென்று பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் தற்போது வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வற்வரி அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உள்நாட்டு நிலைமைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டபோது அதனை உள்நாட்டு நிலைமைகள் ஊடாக சீர் செய்ய முடியும் என்ற விடயத்தினை நாம் கடந்த காலங்களில் தொடர்சியாக வலியுறுத்திக் கூறினோம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டியதோடு குறிப்பாக சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதார நிலைமைகள் நெருக்கடிக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டேன்.
எனினும், அச்சமயத்தில் என்மீதும் அப்போதைய அரசாங்கத்தின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்று குறிப்பிட்டு எனக்கு எதிராக நீதிமன்றத்தைக் கூட நாடியிருந்தார்கள்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தினை நாடினார்கள். நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணைப் பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தற்போது மக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
மக்கள் அன்றாடவாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த தருணத்தில் பலர் நாம் ஏலவே தெரிவித்த கருத்துக்களும், தீர்மானமும் சரி என்பதை ஏற்றுக்கொள்கின்றது.
அதனை பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளும் காலமும் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் ஒருவிடயத்தினைக் கூற வேண்டியுள்ளது.
குறிப்பாக ஆற்றில் குதிப்பதற்கு முன்னதாக அங்கே முதலைகள் இருக்கின்றனவா என்பதை ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே குதிப்பதற்கு தயாராக வேண்டும்.
அவ்வாறு இல்லாது விட்டால் தற்போதைய நிலைமைகளே உருவாகும் என்பது மிகத்தெளிவானது என கூறியுள்ளார்.