வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைக்காக 06 மாத காலத்திற்கு இந்த மார்க்கம் மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.