நாடாளுமன்ற உறுப்பினர்களை நோட்டமிடும் அரச புலனாய்வு அதிகாரிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுஜன பெரமுனவை சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கு எடுத்துள்ள தீர்மானங்களை அறிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை புலனாய்வு அதிகாரிகள் பின்தொடர்வதாக கூறப்படுகின்றது.

இரகசிய பேச்சு வார்த்தை
இருப்பினும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய திட்டமிட்டுள்ள சில அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சில பலமானவர்களுடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதால், புலனாய்வு அதிகாரிகள் எம்.பி.க்களை பின்தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.