இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்கெடுப்பின் படி இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் 60.5 வீதத்தால் குறைந்துள்ளதுடன், குடும்பங்களின் மாதாந்த செலவுகள் 91 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது 3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானம் மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமானம் குறைந்த குடும்பங்கள் கடன் வாங்குதல், பொருட்களை அடமானம் வைப்பது, பிறரிடம் உணவு மற்றும் பணம் கேட்பது போன்ற உண்மைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.