பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தீர்ப்பதற்கான பல்துறை தேசிய செயற்திட்டத்தை முன்வைத்து அதன் உள்ளடக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு ஒன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுல்லே மற்றும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
வீட்டில் பெண்களுக்கு எதிராக இடமபெரும் வன்முறைகளை தடுத்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் முகங்கொடுக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்தத் திட்டம் ஊடாக பிரயோகரீதியாக செயற்பட வேண்டும் என இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதாரப் பிரிவின் வைத்தியர் நெதாஞ்சலி மாபிடிகம குறிப்பிடுகையில், இந்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் கர்ப்ப காலத்தில் வன்முறைக்கு முகங்கொடுப்பதாகச் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டில் தற்பொழுது பல்வேறு பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளாகிய பெண்களின் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகம் என புள்ளிவிபரங்களை முன்வைத்து அவர் மேலும் தெரிவித்தார்.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முன்முயற்சியில் 18 துறைகளை மையப்படுத்தி, 13 அமைச்சுக்களின் விடயப்பரப்புடன் சம்பந்தப்பட்ட வகையில் இந்தப் பல்துறை தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பாலினம் தொடர்பான ஆலோசகர் ஸ்ரீயாணி பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆலோசகர் வைத்திய கலாநிதி லக்ஷ்மன் சேனாநாயக்க ஆகியோர் இந்த பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தின் உள்ளடக்கம் தடோரப்பில் விளக்கமளித்தனர். அதனையடுத்து, செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கு இந்தத் திட்டத்துக்கான தமது கருத்துக்களையும் பிரேரணைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.