இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு EPF,ETF மற்றும் சலுகை கொடுப்பனவுத் தொகையாக ரூ.653 மில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அது நெடு காலமாக ஏற்பட்டு வரும் குறைபாடு என்றும், இதற்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றும், இதற்காக வங்கிக்கடன் எடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இதற்கு நிலையான தீர்வு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு திறைசேரியால் 330 இலட்சம் கடன் செலுத்தி,கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மெட்ரோ என்ற அலுவலகத்தை திறந்தும் கூட இதன் கடன் சுமை இதுவரை 15 கோடியாக உள்ளதாகவும்,
செயற்பாட்டு முகாமையாளருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் சிறப்பு கணக்காய்வு அறிக்கை மூலம் கூட்டுத்தாபணத்திற்கு VACUUM PACK MACHINERY கொள்வனவு குறித்து குறிப்பிடப்பட்டாலும், இந்த தீர்மான முடிவுகள் செயல்படுத்தப்படவில்லை என்றும்,
கம்பஹா மாவட்ட அலுவலகத்தை மையமாகக் கொண்டு பல ஊழல்களும் முறைகேடுகளும் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லலை என்றும், நீர்கொழும்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து ஒரு கிலோ மீனுக்கு 50 ரூபா கப்பம் பெறப்படுவதாகவும், மாதாந்தம் 18 மில்லியன் திருடப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள சில கடைகளில் இருந்து மாதம் 50,000 – 100,000 ரூபா பெறப்பட்டு அந்த கடைகளுக்கு வாடிக்கையாளர்களை திருட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டப்ளியூ.ஜி.யசந்த என்ற அதிகாரியின் முறைகேடுகள் குறித்து முன்னரும் கேள்வி எழுப்பியும் பதில் இல்லை என்றும்,தொழில் நுட்பக் குழுத் தலைவராகவும், தலபத் கொப்ரா குழுவின், கொள்முதல் குழுவின் அனைத்துக் குழுக்களிலும் தலைவராக இருந்து கொண்டு பல பாரியளவிலான மோசடிகளை இவரே செய்து வருகிறார் என்றும் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.
கொள்முதல் முறையின்றி 12950 கிலோ மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும்,இதனை விடுவிக்க இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் அனுமதியை மறுத்த போது, அவர் தலைமை வகித்த குழுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், இது பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இவற்றைச் செய்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.