உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனி உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கரும்பு வகைகளை கண்டுபிடிப்பது தொடர்பான கண்காணிப்புகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி கலும் பிரியங்கர லியனகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு சர்க்கரை உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களுக்கு சீனி நுகர்வு தொடர்பில் மிகக்குறைவான அறிவே உள்ளதால், சீனி நுகர்வு முறை தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீனி ஆலைகளின் துணை உற்பத்தியான எத்தனால் தற்போது மிகையாக உள்ளதாகவும் குழுவில் தெரியவந்துள்ளது.
இதன்படி எத்தனோலை தரத்துடன் ஏற்றுமதி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் குழு முன் குறிப்பிட்டுள்ளனர்.