வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் மலையகத்தில் வீடுகளை நிர்மாணிக்க தனி செயலணி அமைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (2023.11.15) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரிகளை வருமானம் குறைந்த பெருந்தோட்ட மக்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பெருந்தோட்ட மக்களின் நாளாந்த வருமானம் ஆயிரும் ரூபாவாகும். இதன் பிரகாரம் ஒரு தொழிலாளி மாதத்துக்கு 20ஆயிரம் ரூபாவே பெறமுடியுமாக இருக்கிறது. பெருந்தோத்துறையில் 4பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதச்செலவுக்கு 83ஆயிரத்தி 333ரூபா தேவை என்பதை வல்லுனர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த 3வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வாழ்க்கைச்செலவு 3மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களில் 70 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். தோட்டத்துறை மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல.
காணிகளுக்கான உறுதிப்பத்திரம்
அதனால் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் 10ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அதன் பிரகாரம் ஒரு தொழிலாளிக்கு நாளாந்தம் வழங்கப்படும் கூலியுடன் வாழ்க்கைச்செலவாக 500 ரூபா அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தோட்டங்களில் காணப்படும் 4ஆயிரம் ஏக்கர் தரிசு காணிகளை தோட்டங்களில் இருக்கும் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தி கூறிக்கொள்கிறோம்.
சிறுதோட்ட உற்பத்தியாளர்கள் அவர்களின் உற்பத்தியை வர்ச்சியடைச்செய்யய அவர்களுக்கு அந்த காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவேண்டும் மேலும் பெருந்தோட்டங்களில் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்காக ஒரு இலட்சத்தி 50ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. 200 வருடங்கள் வரலாற்றைக்கொண்ட தோட்ட மக்கள் இன்னும் லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் தோட்ட மக்களுக்கு 10பேச் காணி வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
வீடுகள் நிர்மாணம்
அந்த காணிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பமாக பெருந்தோட்ட மக்களை காணி உரிமை உள்ளவர்களாக மாற்றவேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010இல் இந்திய அரசாங்கத்தின் உதவியால் வடகிழக்கில் 50ஆயிரம் வீடுகளும் மலையகத்தில் 4ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வடகிழக்கில் 50ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் மலையகத்துக்கான 4ஆயிரம் வீடுகள் இதுவரை பூர்த்திசெய்யப்படாமல் இருக்கின்றன. அத்துடன் இந்திய பிரதமர் மோடி இங்கு வந்தபோது மேலும் 10ஆயிரம் வீடுகள் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
அதேபோன்று அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதே 10ஆயிரம் வீடுகளை வழங்குவதாகவே தெரிவித்திருக்கிறார். 4ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு சுமார் 13வருடங்கள் சென்றிருக்கின்றன.
அப்படியாயின் ஒரு வருடத்துககு 150 வீடுகளே கட்டி இருக்கிறோம். அதனால் இந்த வேகத்தில் சென்றால், இந்த ஒரு இலட்சத்தி 50ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு இன்னும் 100 வருடங்கள் செல்லும். அதனால் இந்த வீடுகளை நிர்மாணிக்க தனி செயலணி அமைத்து செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.