நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மாவட்ட அரசியல் குழுவினர் மற்றும் அரச அதிகாரிகள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அதேபோல் 2022 டிசம்பர் 22 மற்றும் 2023 ஏப்ரல் 10 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டைக் குறைத்தல், பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், வீதி புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடனடித் தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அதனையடுத்து வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள், ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.
நுவரெலியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்கவர் பகுதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் மூலம், இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்க்க, அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய அவர்களின் பொறுப்புக்களை துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரச நிறுவன பிரதானிகள் தமது நிறுவனங்கள் தொடர்பில் சரியான தெரிவைக் கொண்டிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரச நிறுவனங்களிடத்திலிருந்து மக்களுக்கான சேவை கிடைக்காதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலக கட்டிடத்தின் கீழ் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆடை விற்பனை நிலையமொன்றையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கஞ்சன விஜேசேகர, ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திசாநாயக்க, வீ.ராதாகிருஷ்ணன், மருதபாண்டி ரமேஷ்வரன், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி. லலித் யூ கமகே ஆகியோருடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், நுவரெலிய மாவட்டச் செயலாளர் பீ.கே.நந்தன உள்ளிட்டவர்களும், அரசாங்க அதிகாரிகளும், பாதுகாப்பு பிரிவினரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.