முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்த குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 23 வயதான ஞானசீலன் கீதாஞ்சலியினை அவரது கணவர் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் (24)உடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில், 23ஆம் திகதிமகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து 24 ஆம் திகதி முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் பெண்ணின் கழுத்தில் பலமாக அடிவிழுந்த காரணத்தினால் பெண் அவர் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கு இடையில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
இதன்போது கணவன் மனைவியின் கழுத்தில் தாக்கியதில் மனைவி நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் உடலத்தினை யாருக்கும் தெரியாமல் மலசலகூடத்திற்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கணவன் நேற்று (25)முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.