சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் பிரான்ஸ் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர், பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெலாரஸ் எல்லையில் சடலமாக
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்றுள்ளார்.
இதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருடன் சென்ற ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர் தப்ப வேறு வழியில்லை- கதறும் குடும்பத்தினர்
கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என அவர் கூறியதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சட்டவிரோத ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் பெரும் ஆபத்தை கொண்டிருந்தபோதும், இலங்கைவாழ் தமிழர்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான பயணங்களால் உயிர்ழக்கும் சம்பவங்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.