இஸ்ரேலில் காணாமல் போனதாக கூறப்படும் இரு இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுள்ளனர்.
இதன்போது, இருவரையும் அடையாளம் காண தேவையான புகைப்படங்கள் மற்றும் அவர்களின் உடல் அளவுகள் குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திற்கு குறித்த தகவல்களை அனுப்பிய பிறகு, அது மக்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காஸா பகுதிக்கு அருகில் பணிபுரியும் 20 இலங்கையர்கள் தற்போது தங்கியுள்ள வீடுகளில் இருந்து வேறு பாதுகாப்பான வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சு சுமார் 20,000 அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அவசர காலங்களில் இலங்கையர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 10,000 டொலர்களை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அனுமதி வழங்கியுள்ளது.