பஸ் கட்டணத்தை உயர்த்தும் அளவிற்கு டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை எனவே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை திருத்துவது குறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் அளித்துள்ள விளக்கத்தில்,
பஸ் கட்டணத்தை திருத்த வேண்டுமானால் டீசல் விலை 4 வீதத்தினால் அதிகரிக்கபட்டிருக்க வேண்டும். எனினும் தற்போது 2 வீதம் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் கட்டணத்தை திருத்த கூடியசந்தர்ப்பம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
சிபெட்கோ மற்றும் ஐ .ஓ.சி நிறுவனம் ஆகியவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
இதேவேளை, ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 351 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 421 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 242 ரூபாவாகும்.
இதற்கிடையில், சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக் நேற்று பிற்பகல் முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் 414 ரூபாவிலிருந்து 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவிலிருந்து 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.1 லீற்றர் ஒட்டோ டீசல் 338 ரூபாவிலிருந்து 348 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 92 ஒக்டேன் பெற்றோலின் விலை திருத்தப்படவில்லை என சினோபேக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.