சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 03 மாவட்டங்களில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களுகங்கை, கிங்கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலை தொடர்வதால், நாட்டின் 08 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (01) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.