நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் அடை மழை பெய்து வருகிறது. மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா வீதியிலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் மலையகத்திற்கான போக்குவரத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நுவரெலியா மாட்டத்தின் பிரதான வீதிகளில் தற்போது நிலவும் காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினிகத்தேனை, கடவல வட்டவளை செனன் உள்ளிட்ட இடங்களிலும் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலும் கடும் பனி மூட்டம் அடிக்கடி காணப்படுவதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் போது தமக்கு உரிய பக்கத்தில் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.
எனவே இந்த வீதிகளில் பயணஞ்செய்யும் வாகன சாரதிகள் மிகவும அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.