நாட்டை சுற்றியுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகள் மற்றும் இரண்டு உயிருள்ள ஆமைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆமைகளின் ஓட்டின் மேற்புறமும் கடுமையாக விரிசல் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில ஆமைகள் மூளை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் ஏதேனும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த ஆமைகளின் சடலங்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் 04 நிறுவனங்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அடுத்த சில நாட்களுக்குள் அவசர அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.