பெண்களை ஏமாற்றி, சுயநினைவை இழக்கச்செய்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குழுவொன்றை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹட்டனில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்ட பெண் ஒருவருடன் சந்தேகநபர் ஒருவர் நட்பை ஏற்படுத்தி, குறித்த பெண்ணை வாகனத்தின் மூலம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இரு இளைஞர்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த போது ஹட்டன், டிக்கோயா பகுதியில் வைத்து குறித்த பெண்ணுக்கு அருந்துவதற்கு நீரை கொடுத்துள்ளனர் .
இந்தநிலையில் சுயநினைவை இழந்த நிலையில் அவரின் கழுத்திலிருந்த தங்க நகை கொள்ளையடித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் டிக்கோயா வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் பெண்ணை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வீதியில் பயணித்த சிலர் மயங்கிய நிலையில் காணப்பட்ட பெண்ணை டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பித்து முச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் பல பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் எனவும் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .