எம்முடைய மண், நான்கு புறத்திலும் நீரால் சூழப்பட்டிருப்பதால் இந்த மண்ணில் பிறப்பவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற்றால் நல்ல நிலைக்கு முன்னேற முடியும் என்பது அசைக்க இயலாத நம்பிக்கை.
சிறிமாவோ பண்டார நாயக்கா முதல் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க வரை ஆட்சியில் இருக்கும் அதிபர்கள் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பதை தங்களது கடமையாக கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று இலங்கையில் பிறந்தவர்களுக்கு வேங்கட மலையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசித்தால் முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டு. என்பது முன்னோர்களின் அனுபவ மொழி.
இதனால் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் எம்மவர்கள் தவறாமல் திருப்பதிக்கு சென்று வருவதை தவிர்க்க இயலாத பயணமாய் கருதி மேற்கொள்கிறார்கள். திருப்பதி என்றவுடன் நினைவுக்கு வருவது ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அருளுடன் கூடிய சுவையான மணக்கும் லட்டு.
இந்த லட்டு எனும் இனிப்பு பண்டம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது என்பதால், இங்கு வருகை தந்து பெருமாளை தரிசித்து தாயகம் திரும்புபவர்களிடம் ‘மறக்காமல் லட்டுவை வாங்கி வாருங்கள்’ என்று அன்பு வேண்டுகோள் விடுபவர்களும் உண்டு.
லட்டு என்பது இந்த ஆலயத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. அதனுடன் கட்டணத்திற்காகவும் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டு வேங்கடவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளை கடந்திருக்கிறது என ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு இனிப்பு பொருள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனை செய்யட்டும். பிரசாதமாக வழங்கப்பட்டும். மூன்று நூற்றாண்டுகளாய் கடந்திருக்கிறது என்றால், அது திருப்பதியில் வழங்கப்படும் லட்டு மட்டும் தான்.
இந்த லட்டு 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து வேங்கடவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது என்று கல்வெட்டு குறிப்புகள் மூலமாக அறிகிறோம். நாளாந்தம் திருப்பதியில் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், பிரம்மோற்சவ விழா நடைபெறும் காலகட்டத்தில் நாளாந்தம் ஐந்து லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த லட்டுவினை ‘மிராசி: எனும் குறிப்பிட்ட உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு அனுபவிக்க பிரிவினர் என்றும், இதனை தங்களது அருள் ஆசியுடன் கூடிய கடமை என கருதி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதே தருணத்தில் லட்டு மூன்று வகையாக தயாரிக்கப்படுவதாகவும், அதில் மூன்றாவது வகையிலான லட்டுக்கள் மட்டுமே பக்தர்களுக்கு இலவசமான பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு மனோகரம் எனும் இனிப்பு முறுக்கு தான் பிரசாதமாக வழங்கப்பட்டிருக்கிறது. என்பதும் கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
திருப்பதியில் லட்டுவை தவிர்த்து பக்தர்களுக்கு பொங்கல், தயிர் சாதம், புளி சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி என ஏராளமான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் பக்தர்கள் லட்டுவைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள்.
லட்டு குறித்து காஞ்சி மகா பெரியவர் குறிப்பிடும்போது, ” லட்டின் சுவை வித்தியாசமாக இருப்பதற்கு அவற்றில் கலக்கப்படும் உணவுப் பொருட்களுடன் வெங்கடவனின் அருளும் இணைக்கப்பட்டிருப்பது தான் காரணம். மேலும் லட்டுவை நீங்கள் விரும்பி சாப்பிட நினைத்தாலும், வெங்கடேச பெருமாள் மனது வைத்து நினைத்தால் மட்டுமே உங்களுக்கு அவருடைய அருட்பிரசாதமான லட்டு வந்தடையும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் காரணமாக எம்மில் பலரும் திருப்பதியில் லட்டுவை நொறுக்கு தீனி என்றும், இனிப்பு பண்டம் என்றும், நினைக்காமல் வேங்கடவனின் அருள் பிரசாதம் என கருதினால் அவை உங்களை வந்தடையும்.
குருவின் அருள் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களும், வியாழக்கிழமையன்று பிறந்தவர்களுக்கும் லட்டுவை குறிப்பாக திருப்பதி லட்டுவை சாப்பிட்டால் உரிய பலன் கிடைக்கும். மேலும் சந்திர பகவானின் அருளைப் பெற வேண்டும் என விரும்பினால் பௌர்ணமி தினத்தன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து , லட்டுவை சுவைத்தால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை.